சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளுக்கும் 1,736 பேர் விருப்ப மனு கொடுத்தனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் அ.திமு.க. போட்டியிடுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நேர்காணல் இன்று தொடங்கியது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், தமிழ் மகன்உசேன், பா.வளர்மதி, டாக்டர் வேணுகோபால் ஆகியோர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் நேர்காணல் நடத்தினார்கள்.
சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய 10 தொகுதிகளுக்கு காலையில் நேர்காணல் நடந்தது.
முதலாவதாக சேலம் தொகுதிக்கு தற்போது எம்.பி.யாக உள்ள பன்னீர் செல்வத்திடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு உள்ள சாதக, பாதகம் குறித்து கேட்டறிந்தனர்.
மாலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.
வேட்பாளர் தேர்வு நடைபெறுவதால் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர். நாளை 12-ந்தேதி மீதமுள்ள 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது.