கும்பகோணம், ஏப். 11 –
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தமிழக அரசு, 150 சதவீதம் உயர்த்திய சொத்து வரியை கண்டித்தும் அதனை திரும்ப பெறவும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்
முன்னதாக, கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம் ! மக்கள் விரோத தமிழக அரசை கண்டிக்கின்றோம் ! திரும்ப பெறு ! திரும்ப பெறு ! வரி உயர்வை திரும்ப பெறு ! வாட்டி வதைக்காதே ! வாட்டி வதைக்காதே ! வரி என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்காதே ! மத்திய மாநில அரசுகளே ! பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்து என முழக்கமிட்டனர்.
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், மக்கள் விரோத, ஸ்டாலின் தலைமயிலான தமிழக அரசு, மக்களை ஏமாற்றி, கூட்டணி பலத்துடன் ஆட்சியை பிடித்தார். அதன் பின்பு, மக்களை பற்றி கவலைப்படாமல், ஒரு இடி அமீன் ஹிட்லரை போல செயல்படுகிறார். கடந்த கால வியாபார கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, இவர்களது ஏமாற்று உறுதிமொழிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு இன்று ஸ்டாலின் வரி உயர்வு போன்ற தண்டனைகளை பரிசாக அளித்துள்ளார். எனவே, திமுக எப்போதுமே தீய சக்தி தான், விஷபாம்பு தான் அதில் எவ்வித மாற்றம் இல்லை, கடந்த அதிமுக ஆட்சியில் 2018, இவர் எதிர்கட்சி தலைவராக இருந்த போது, 50 சதவீத வரி உயர்த்திய போது, இது சொத்து வரியா ? அல்லது சொத்தை பறிக்கும் வரியா என்றார்.
ஆனால் இவரது ஆட்சியில் தற்போது 150 சதவீதம் உயர்த்தியது நியாயம் தானா ? பேரிடர் காலம் சீராகும் வரை எந்தவிதமான வரியையும் உயர்த்த மாட்டோம் என்ற உறுதிமொழி என்னவாற்று ? திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை ஏறி விட்டது ! ஒரே கையெழுத்தில் நீட் ரத்தாகும், மகளிர் உரிமை தொகை, என்ற உறுதிமொழி எல்லாம் என்னவாற்று ? கடந்த காலத்தில் அதிமுக பங்காளி ஆட்சி காலத்தில், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், கலைக்ஷன், கமிஷன் கரப்ஷன் என்றார் அது இப்போது ஒவ்வொன்றும் ஸ்கொயர் ஆகி விட்டது என்பது மட்டும் உண்மை கலைக்ஷன் ஸ்கொயர், கமிஷன் ஸ்கொயர், கரப்ஷன் ஸ்கொயர் என்றாகி விட்டது. மேலும் நிலைமை, மீண்டும் 1976 க்கு திரும்பும் வாய்ப்புள்ளது, அதாவது ஊழலுக்காக, முறைகேடுகளுக்காக, கலைக்கப்படும் ஆட்சியாக கூட தற்போதை திமுக அரசு அமையும் வாய்ப்புள்ளது என்றும், டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சொத்து வரி உயர்விற்காக, தமிழக அரசை கண்டித்து நேற்று தொடங்கி 10 நாட்களுக்கும் தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமமுக சார்பில் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.