கும்பகோணம் அருகே சாலை பணிக்காக கோவிலை இடிக்க மனமில்லாமல் நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு கோவில் கருவறை மண்டபத்தை நகர்த்தி வைக்கும் பணியைச் செய்து வருகிறார்கள் அவ்வூர் பொது மக்கள் !.
கும்பகோணம், செப். 15 –
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா இரும்புதலை கிராமத்தில் 50 ஆண்டு பழமையான மாரியம்மன் கோவில் சாலையோரம் உள்ளது. இந்த கோவில் கருவறை மண்டபம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருப்பதால் உடனே இடித்து தரவேண்டும் என்று கிராம மக்களிடம் நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். இதை கேட்டு வேதனை அடைந்த கிராம மக்கள் கோவில் கருவறை மண்டபத்தை இடிக்க மனமில்லாமல் மாற்று வழியில் கருவறை மண்டபத்தை அகற்ற முடிவு செய்தனர். இது குறித்து கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டனர். அப்போது கருவறை மண்டப கட்டிடத்தை சேதமின்றி அப்படியே நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு ஜாக்கிகள் கொண்டு அதன் மூலம் கருவறை மண்டபத்தை நகர்த்தி வைக்க முடியும் என கட்டிட வல்லுனர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
இதனையடுத்து நவீன தொழில்நுட்பத்தில் கட்டிடத்தை நகர்த்த முடிவு செய்து அதற்காக தொழில்நுட்ப வல்லுநர்களை உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து வரவழைத்தனர். அவர்கள் கோவில் கருவறை மண்டபத்தை சுற்றி பள்ளங்கள் தோண்டி 100-க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் பொருத்தி கருவறை மண்டபத்தை பாதுகாப்பாக நகர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 10 அடி தூரம் நகர்த்தி உள்ளனர். இன்னும் ஓரிரு வாரத்தில் 40 அடி தூரத்தில் நகர்த்தி வைக்கப்பட உள்ளது என்று வல்லுனர்கள் தெரிவித்தனர். கிராம மக்களின் செயலால் கருவறை மண்டபம் இடிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் அவர்களின் இச் செயல் குறித்து சுற்று புற கிராமங்களை சார்ந்தவர்கள் இப்பகுதி மக்களை வெகுவாக பாராட்டி வருகின்றார்கள். .