திருவண்ணாமலை, செப்.10-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டிஎன்எஸ்டிசி மண்டல தலைவர் கே.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎன்எஸ்டிசி மண்டல பொதுச் செயலாளர் எஸ்.லட்சுமி நாராயணன், கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கே.நீதிமாணிக்கம் பேசினர்.
அதனைத் தொடர்ந்து டிஎன்ஜிபிஏ மாநில துணைத் தலைவர் த.குப்பன், சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டததில் 1.1.2020 முதல் வழங்க வேண்டிய 3 தவணை (11சதவிதம்) அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிட வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு மருத்துவ செலவினத்தை மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் முழுமையாக ஓய்வூதியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
மாவட்ட அளவிலான குழு உத்தரவிட்டும் காப்பீடு நிறுவனம் தொகை வழங்காமல் திருப்பிவிடும் போக்கை கண்டிப்பதோடு செலவு செய்த தொகை முழுவதும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் கே.கார்த்திகேயன் இபி ஆனந்தன் எஸ்.பாலசுந்தரம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் டிஎன்இபிடபிள்யுஒ மாவட்ட பொருளாளர் ஆர்.கஜேந்திரன் நன்றி கூறினார்.