கும்பகோணம், ஏப். 09 –
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 7-ந் தேதி மாலை தாராசுரம் வழியாக எலுமிச்சங்காய்பாளையத்திற்கு, தனியார் மினி பேருந்து பயணிகளுடன் சென்றது. பேருந்தை வசந்த் (வயது 27) ஓட்டிச் சென்றார். நடத்துனராக வினோத் (25), பணியில் இருந்தார்.
இந்நிலையில், மினி பேருந்து செல்லும் வழியில் திடீரென பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது. அப்போது அந்த மினி பேருந்து பயணம் செய்த வாலிபர் ஒருவர் அடிக்கடி இப்படி பேருந்து பழுது ஏற்பட்டால் எப்படி பயணம் செய்வது என கேட்டு நடத்துநர் வினோத்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் அந்த வாலிபருக்கும் வினோத்துக்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்து பழுது பார்க்கப்பட்டு புறப்பட்டதும் தகராறில் ஈடுபட்ட வாலிபர், தாராசுரம் மார்கெட் நிறுத்தத்தில் இறங்கி சென்றார்.
இதனைத் தொடர்ந்து, தாராசுரம் எலுமிச்சங்காய்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த மினி பேருந்தை பின் தொடர்ந்தது வந்த அந்த வாலிபர் பேருந்தை மறித்து நிறுத்தினார். இதையடுத்து கையில் பட்டாகத்தியுடன் பேருந்துக்குள் ஏறிய அந்த வாலிபர், நடத்துனர் வினோத் மற்றும் ஓட்டுனர் வசந்த் இருவரையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து பலத்த காயமடைந்த வினோத் மற்றும் வசந்த் இருவரையும் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து வினோத், தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தாலுகா காவல்துறையினர் பேருந்தில் பொறுத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் பேருந்தில் ஏறி ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கியவர் வாலிபர் கும்பகோணம் கர்ணகொல்லை தெருவை சேர்ந்த முரளிதரன் (எ) ஹரிஹரன் (எ) மோப்பஹரி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் முரளிதரனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் மாதா கோவில் பகுதியில் முரளிதரன் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு நின்று கொண்டிருந்த முரளிதரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.