கும்பகோணம், பிப். 5 –
கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படுவது கும்பகோணம் அருகேயுள்ள சூரியனார்கோயில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இத்திருக்கோயிலில், சூரியபகவான், உஷாதேவி, பிரத்யுஷாதேவி ஆகிய இரு மனைவியர்களுடன், திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார் வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எப்படி அமைந்துள்ளதோ அதேபோல இத்திருக்கோயிலில் அனைத்து நவக்கிரகங்களும் தனித்தனி சன்னதி கொண்டு தங்களுக்குரிய ஆயுதமோ, வாகனமோ இன்றி சாந்த சொரூப கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்,
இத்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் ரதசப்தமி விழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோலவே இவ்வாண்டும் இவ்விழா கடந்த மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பிரகார உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 7ஆம் நாளான இன்றிரவு சிவசூரியபெருமானுக்கு உஷாதேவி மற்றும் பிரத்தியுக்ஷா தேவியுடன் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது, திருக்கல்யாண உற்சவத்தின் முதற்கட்டமாக நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவசூரியபெருமான் விசிறி, குடையுடன் காசியாத்திரை செல்லுதல் மற்றும் சீர்வரிசைகளுடன் மாப்பிள்ளை அழைப்பும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இரு தேவியருடன் மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது பின்னர் சுவாமிகள் ஊஞ்சலில் வீட்டிருக்க நலுங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவமும் அதனையடுத்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் கூறி, யாகம் வளர்த்து திருமாங்கல்ய தாரணமும் கோபுர ஆர்த்தி மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்