கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம், செப். 9 –
கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள, அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 500 ஆண்டுகள் பழமையும், தொன்மையுமானது, இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், மிகவும் சிதலமடைந்திருந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டது.
கடந்த 06ம் தேதி திங்கட்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, புனிதநீர் கொண்டு வருதலுடன் யாகசாலை பூஜைகள் ரவி சிவாச்சாரியார் தலைமையிலும், சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் சதீஷ் சிவாச்சாரியார் முன்னிலையிலும் தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் செண்டை மேளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது .
பின்னர், கோபுர விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், நடைப் பெற்றது . இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை 10ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மண்டலாபிஷேக பூஜைகள் 48 நாட்களுக்கு நடைபெறுகிறது. என்பது குறிப்பிடதக்கது.