கும்பகோணம், டிச. 20 –
கும்பகோணம் அருகே வடுக பைரவத் தலமான திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், பெரிய வாழை இலையில், ஆருத்ரா களியை படையலிட்டு, திருவெம்பாவை பாடி, 16 விதமான சோடஷ உபசாரணைகளுடன், கோபுர ஆர்த்தி செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, சுவாமிகள் திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் வட்டம், திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுகபைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது, ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருதயுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில் வேத்ரவனம் (பிரம்பு) என்றும் திகழ்கிறது.
இத்தல இறைவனை மூன்று கோடி மந்திர தேவதைகளும், பிரமன், எமன் முதலான தேவர்களும், துர்வாசர், அகத்தியர் முதலான முனிவர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர் இத்தலத்தில் இறைவன் ஆணைக்கு இணங்க, நந்தியம்பெருமான் கொம்புகளால் உண்டாக்கப்பட்ட சிருங்கோத்பவ தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, இத்தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபடுவோர், எம பயம் கிடையாது, பிதுர்சாபம் நீங்கும், புத்திரபேறு கிட்டும், மனக்கவலை அகலும், குடும்ப நலம் பெருகும், துர்வாச முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தலஅம்பிகை திருமாலாக காட்சியளித்ததாக வரலாறு ..
இங்கு காவிரி நதி உத்தரவாஹிநியாக (வடகாவேரியாக) பாய்ந்தோடும் பெருமை கொண்டது இத்தலம். மேலும் இங்கு அகத்திய முனிவரால் காவிரி மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கரையேற்று விநாயகர் அருள் பாலிக்கிறார். கண்டராதித்த சோழன் மனைவி, செம்பியன் மாதேவியால் எழுப்பப்பட்ட முதற் கற்கோயில் இதுவாகும். இங்கு துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடுக பைரவரை வழிபடுவோர் வறுமை நீங்கி, செல்வம் பெருகும், வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். இத்தலத்தை போற்றி, திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் போற்றி பாடியுள்ளனர். மேலும், இத்தலத்தில் எமன், சித்ரகுப்தர், பாலசனி பகவான், வடுகபைரவர் ஆகியோர் தினத்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
அது மட்டுமின்றி, இத்திருக்கோயில் பிரகாரத்திலேயே கற்சிற்பமாக அருள்பாலிக்கும் சிவகாமி அம்பிகா சமேத நடராஜபெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. என்பது குறிப்பிடதக்கது. இத்தகைய பெருமை கொண்ட சிவதலத்தில் இன்று மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் சிவகாமி அம்பிகா சமேத நடராஜ பெருமான், விசேஷ பட்டுடுத்தி, சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, பெரிய வாழை இலையில், ஆருத்ரா களியை படையலிட்டு, திருவெம்பாவை பாடி, 16 விதமான சோடஷ உபசாரணைகளுடன், கோபுர ஆர்த்தி செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, சுவாமிகள் அசைந்தாடியபடி கோயிலில் இருந்து புறப்பட்டு திருவீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்


















