காஞ்சிபுரம், மே. 13 –
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா நோய்தொற்று காரணமாக இரண்டாண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படும், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம், பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் போற்றும் வகையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அத்திவரதர் வைபவத்திற்குப் பிறகு கொரோன வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த 2020,2021 ஆண்டுகளில் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்தது.
தற்பொழுது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீங்கி உள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்றது.
வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அதிகாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவம் வரும் 22ஆம் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை மாலை என இருவேளைகளிலும் வரதராஜப்பெருமாள், தங்க சப்பரம், சிம்மம், ஹம்சம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி, யானை, குதிரை, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரவுள்ளார்.
வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான கருடசேவை உற்சவம் வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், திருத்தேர் உற்சவம் 19ஆம் தேதி வியாழக்கிழமையும் வெகு விமர்சியாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி திருக்கோவில் காலை உற்சவத்தில் தங்கசபர வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி ரங்கசாமி குளம், கீரை மண்டபம், பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழியெங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்