ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஸ்டாலின் மனவிரக்தியில் உள்ளார். அதனால்தான் அவர் எங்களை குறை கூறுகிறார். அவர் கிராம பஞ்சாயத்துக்கு கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஸ்டாலின் எதை செய்தாலும் அவர் வெற்றி பெற முடியாது.
பாராளுமன்றத்தில் தமிழகத்தின் நலனுக்காக குரல் எழுப்பி உள்ளோம். மத்திய அரசு அதற்கு செவி சாய்த்து உள்ளது. பரிசீலனையும் செய்கிறார்கள். எங்களது முக்கிய குறிக்கோளே தமிழகத்தின் நலன்தான்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் என்னை போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன்.
மக்களின் ஆதரவு இருப்பதால்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் கனவுப் படி எங்களது கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப்போடும் மனநிலையில் மக்கள் உள்ளனர்.
தி.மு.க.வின் சந்தர்ப்பவாத கூட்டணியை முறியடிக்கவே நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.