சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: நவ.11-
வறட்சி மற்றும் மழைக்காலங்களில் வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை ஏற்றம் காணும் போதெல்லாம் பொது மக்களின் நலன் கருதி அவ்வகை பொருள்களை அரசே கொள்முதல் செய்து குறைந்த விலையில் பண்ணை பசுமை காய்கறி அங்காடிகளில் வழங்கி வருகிறது. பண்ணை பசுமை கடைகளில் போதுமான அளவு வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் இருப்பு உள்ளதையும், குறைந்த விலையில் மக்கள் காய்கறிகளை வாங்கி செல்வதையும் அமைச்சர் ஆய்வின் போது அவர் உறுதி செய்தார்.
வெளிச்சந்தையை விட தரமான வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 மற்றும் ரூ.40 என்ற குறைந்த விலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து வரத்து குறைவாக இருப்பதாலும், பருவமழை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதாலும் ஓரளவு விலையேற்றம் காணப்படுகிறது. இருப்பினும் விலையை கட்டுக்குள் வைக்கவும், அனைத்து காய்கறிகளும் தொடர்ந்து குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்கவும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என, அமைச்சர் தெரிவித்தார்.
ஆய்வின் போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர். தயானந்த் கட்டாரியா உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் இரா. கண்ணன், மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.