திருவண்ணாமலை பிப்.17-
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்வது வழக்கம். அதன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 23 மாதங்களாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்தையட்டி ஆன்லைனில் முன்பதிவு செய்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கிரிவலம் செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பிப் மாத பவுர்ணமி செவ்வாயன்று இரவு 10.30 மணிக்கு தொடங்கி புதனன்று இரவு 11.30 மணிக்கு நிறைவடைந்தது. எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் கடந்த 2 நாட்களாக ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வர தொடங்கினர். அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு முதல் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று விடியவிடிய அதிகளவில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பவுர்ணமி இரவு 11.30 மணிவரை நீட்டித்திருந்ததால் நேற்று விடியற்காலை வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தடையை மீறி கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் ராஜகோபுரம் மற்றும் அம்மணிஅம்மன் கோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சுவாமி சின்னதி அம்மன் சன்னதி தவிர்த்து மற்ற பிரகாரத்திற்கு செல்ல விதித்திருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருந்தன. கோவிலில் மற்ற பிரகாரங்களில் உள்ள சன்னதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பவுர்ணமியையட்டி அமர்வு தரிசனம் சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பக்தர்கள் கிரிவலம் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தநிலையில் 23 மாதங்களுக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் 14 கி.மீ. தூரமுள்ள கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டு கிரிவலம் சென்றது குறிப்பிடத்தக்கது.





















