பொன்னேரி, சனவரி. 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் நேசபிரபு, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல்  ஒன்று கொலை வெறி நோக்கத்துடன் செய்தியாளரின் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் 15க்கும் மேற்பட்ட பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் செய்தியாளரை கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து  தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக அவரைத் தாக்குவதற்காக அந்த மர்ம கும்பல் தம்மை பின் தொடர்வதை அறிந்த செய்தியாளர் நேசபிரபு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் அச்சம்பவம் குறித்த தகவல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி பல்வேறு பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் டிஜிடல் மீடியா நிறுவனங்களில் பத்திகையாளர்களாக பணிப்புரிந்து வரும் அனைவருக்கும் தெரிய வர அதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக தமிழ்நாடு முழுவதும் இந்த மனிதாபிமானமற்ற காட்டு மிராண்டித் தனமான கொலை வெறித்தாக்குதலை கண்டித்தும், மெத்தனப்போக்கை கையாண்ட காவல்துறையின் போக்கினை கண்டித்தும், மேலும்  தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களையும் அவர்களுக்கு பின்னாலிருக்கும் உண்மையான குற்றவாளியையும் உடனடியாக கைது செய்ய கோரியும், தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீது சமூக விரோதிகளால் ஏற்படும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் அரசு பத்திரிகையாளர்களுக்கு  உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு விடுத்து போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களையும் அவர்கள் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகளையும் கைது செய்ய  வேண்டும், மேலும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடும் வகையில் சட்டம் இயற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் தமிழக முதல்வர் இப்பிரண்ணினையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  நிறைவாக  பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை செய்தியாளர்கள் வழங்கினார்கள்.

அக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாலகிருஷ்ணன், அருள்,  எம்.கே.குசேலன்,  யாக்கோபு, முத்து,  ஏகாம்பரம்,   ஜெயச்சந்திரன்,  பாலகணபதி, ஸ்ரீதர், மில்டன், ராஜசேகர் ,தாமோதரன், அஜீஸ் (எ) பாபு, கர்ணன், மகேஷ், குணா, ராஜேஷ், ராதாகிருஷ்ணன், விநாயகம், குமரன், முருகன், மாறன், வினோத் உள்ளிட்ட மூத்த மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here