தமிழகம் முழுவதும் ஏராளமான நபர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி அவர்களிடம் இருந்து பண மோசடியில் ஈடுப்பட்ட ஜான் மெக்னம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற போலி நிறுவன கும்பலைச் சேர்ந்த 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் தலைவியாக செயல்பட்ட பெண் தலைமறைவாக உள்ளார். அவரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சென்னை, அக். 11 –
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கறையில் சொகுசு விடுதி ஒன்றை ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்து 10 க்கும் மேற்பட்டோர் வந்து தங்கியுள்ளனர். அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்ததால் சொகுசு விடுதியை நடத்தி வரும் தீபக் என்பவர் நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் அவர்களுக்கு செல்போன் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் நீலாங்கரை குற்றப்பிரிவு ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் சொகுசு விடுதியில் தங்கியிருந்த அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்களில் 5 பேர் ஜான் மெக்னம் என்ற பெயரில் எம்.எல்.எம் தொழில் செய்து பல பேரை ஏமாற்றும் மோசடி கும்பல் என தெரியவந்தது. மீதமுள்ள நபர்களை வேலைக்காக அழைத்து வந்துள்ளனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மோசடி கும்பலான திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமார் (35), ராஜா (37), கோயம்புத்தூரை சேர்ந்த மோகனகுமார் (48), சரவணன் (53), பாலகிருஷ்ணன் (43). ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஜெர்மனியில் உள்ள வங்கியில் இரிடியம் வைத்திருப்பதாகவும், அதில் ஒவ்வொருவரும் தலா 10,000 முதலீடு தால் 6 மாதத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி சதுரங்க வேட்டை பட பாணியில் பொய்களை சொல்லி ஏமாற்றியுள்ளனர்.
அதோடு 10 பேரை இணைத்தால் அதற்கும் கமிஷன் என அள்ளிவிட்டு பெரிய பெரிய சொகுசு விடுதிகளில் மீட்டிங் ஏற்பாடு செய்து தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களை சேர்ந்த 20,000 க்கும் மேற்பட்டோரிடம் பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பிடிபட்டர்களிடம் இருந்து 50,000 ஆயிரம் பணம், 3 கம்யூட்டர், 1 லேப்டாப் மற்றும் ஏமாற்றியவற்களிடம் போடப்பட்ட ஒப்பந்த பத்திரங்கள் தொகுப்பு கொண்ட ஒரு பென்ட்ரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் மீது 406, 420, 465, 468, 471, 120(b), 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இத்தனை மோசடிக்கு பின் ஜான் மெக்னம் போலி நிறுனவத்தின் மூளையாக இருந்து செயல்பட்டு வந்த காயத்திரி தலைமறைவானதையொட்டி போலீசார் காயத்திரியை தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து இவர்களால் இதுவரை ஏமாற்றப்பட்டோர் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.