குடவாசல், செப். 25 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை, வடக்கு தெருவில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி.அவரது மனைவி மாரிமுத்து அம்மாள். இவர்களுக்கு மகன் நாகராஜ் உட்பட ஆறு வாரிசுதார்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு பாத்தியப்பட்ட குடும்பச் சொத்தான 10 செண்ட் காலி நிலம் நாகராஜனின் தாயாரும், தட்சிணாமூர்த்தி என்பவரின் மனைவி மாரிமுத்தம்மாள் பெயரில் இருந்த நிலையில் மாரியம்மாள் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவர் பெயரில் உள்ள குடும்ப சொத்துக்கள் அவரது குடும்ப வாரிசுகளான மகன் நாகராஜன் உட்பட மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள ஆறு வாரிசுதாரர்களுக்கு இச்சொத்து சொந்தமாகிறது. அதற்கான ஆவணங்களை நாகராஜ் மற்றும் அவர்களது வகையாறா திருக்கண்ணமங்கை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருவாரூர் மாவட்ட சர்பதிவாளர் அலுவலகத்திலும் அதற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அச் சொத்துக்களை, திருக்கண்ணமங்கை மேல தெருவைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் பக்கிரிசாமி, மற்றும் அவரது மகன் கலைவாணன் என்பவரும் மாரியம்மாள் என்பவரின் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து பட்டாவை மாற்றி வைத்துக் கொண்டு நாகராஜ் வகையாறாக்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை ஆக்கிரப்பு செய்துக் கொண்டு தர மறுப்பதோடு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் நாகராஜன் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுக் குறித்து நாகராஜன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 10.08.2021 அன்று புகார் மனு அளித்துள்ளார். மேலும் வாரிசுதாரர்களில் ஒருவரான தினகரன் என்பவர் 22.11.2021 அன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், 10.01.2022 அன்று, குடவாசல் காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பக்கிரிசாமி மற்றும் அவரது மகன் கலைவாணன் மேலும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் செல்வாக்கை தவறான வகையில் பயன்படுத்தி இறந்து போன மாரியம்மாளின் வாரிசுதாரர்களில் ஒருவரான தினகரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
அதனால் எழுந்த கைகலப்பில் தினகரன் மற்றும் அவரது தாயார் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமுற்ற இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த குடவாசல் காவல்நிலைய போலீசார் இப்பிரச்சினைக் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் நாகராஜன் மற்றும் அவர்களது வகையறாக்கள் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் பேரில் போலி ஆவணங்கள் மூலம் தங்கள் சொத்தை அபகரித்து சர்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அவற்றை ரத்து செய்தும் மேலும் நில மோசடி வழக்கு அவர்கள் மீது மாவட்ட காவல்துறை நிர்வாகம் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் சொத்தை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.






















