ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் பார்த்தசாரதி தெருவில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று காலை 9 மணிக்கு திடீரென 2 கார்களில் வருமானவரி துறையினர் வந்தனர்.
டெல்லியில் இருந்து 11 அதிகாரிகளும், சென்னையில் இருந்து 9 அதிகாரிகள் மண்டபத்தின் கதவுகளை மூடிவிட்டு அங்கு சோதனை நடத்தினர். 13 மணி நேரம் நடந்த சோதனை இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.
அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
திருமண மண்டப மேலாளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு இரவு 10.30 மணிவரை சோதனை நடைபெற்றது. சத்தியமூர்த்தி வீட்டில் 2 மஞ்சள் நிற பைகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது.
மேலும் அமைச்சரின் நேர்முக உதவியாளரும், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சீனிவாசன் வீட்டிலும் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடந்தது.
அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. நகை பணம் எதுவும் சிக்கவில்லை. இது குறித்து தகவல்களை வருமான வரிதுறையினர் தெரிவிக்க மறுத்தனர்.
காட்பாடி காந்திநகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி ரெட்டி. கோபாலகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். 2 பேரும் ஒன்றாக ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் வீடுகளில் நேற்று காலை 6.30 மணி முதல் 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
காட்பாடி பாரதிநகரில் உள்ள ராமமூர்த்தி ரெட்டியின் தம்பி மோகன்ரெட்டி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது.
வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போல குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான வி.டி.சிவக்குமார் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து வருமான வரித்துறையினர் வி.டி.சிவக்குமாரை அழைத்துக்கொண்டு, அவர் வங்கி கணக்கு வைத்துள்ள கே.வி.குப்பத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரூ. 300 கோடி மதிப்புள்ள 6.90 ஏக்கர் நிலம் தொடர்பாக காட்பாடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோருக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமமூர்த்தி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் நிலப்பிரச்சனையில் தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது அந்த நில விவகாரத்தில் அமைச்சருக்கு தொடர்பில்லை என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய அனைவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
ரூ. 300 கோடி மதிப்பிலான இந்த நிலப்பிரச்சனை தொடர்பான இந்த திடீர் சோதனை சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இதில் மத்திய வருமான வரி துறையினர் களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.