ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளை (27-ந்தேதி) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடி விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

மேலும் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையும் இருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அவரால் ஆஸ்திரேலியாவின் கடைசி நேர வீரர்களுக்கு ஏற்ற வகையில் நேர்த்தியாக வீச முடியாமல் 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இதனால் நாளைய போட்டிக்கான அணியில் அவர் கழற்றி விடப்படலாம் என்று தெரிகிறது. உமேஷ் யாதவ் இடத்தில் சித்தார்த் கவுல் இடம் பெறலாம். தவான் ஆடும் பட்சத்தில் குருணால் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் கழற்றி விடப்படலாம்.

முதல் போட்டியில் லோகேஷ் ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. டோனி நிலைத்து நின்று ஆடினாலும் ஆமை வேகத்தில் விளையாடினார். இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். பந்து வீச்சில் பும்ரா, சாஹல் நல்ல நிலையில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி நாளைய ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி சமபலத்துடன் உள்ளது.

பேட்டிங்கில் மேக்ஸ்வெல், டி’ஆர்கி ஷார்ட் ஆகியோரும் பந்து வீச்சில் நாதன் கவுல்டர் நைல், கம்மின்ஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 20-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 19 ஆட்டத்தில் இந்தியா 11-ல், ஆஸ்திரேலியா 7-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here