விசாகப்பட்டினம்:

‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

காஷ்மீரில் உள்ள புலவாமாவில் கடந்த 14-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடுர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுடன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜூன் 16-ந் தேதி மோத இருக்கும் ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்களில் ஒரு சிலர் வற்புறுத்தி உள்ளனர். அதேநேரத்தில் பாகிஸ்தானுடன் மோதி அந்த அணியை வீழ்த்தி வெளியேற்ற முயற்சிக்க வேண்டும் என்று சில வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டுமா? என்பது குறித்து ஆலோசிக்க கூடிய இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் உரிய நேரத்தில் இந்த விஷயம் குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் பங்கேற்க விசாகப்பட்டினம் சென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியிடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுமா? என்று கேட்டதற்கு பதில் அளிக்கையில், ‘புலவாமா தாக்குதலில் உயிரை இழந்த துணை ராணுவ படை வீரர்களின் குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். நடந்த துயர சம்பவத்தால் இந்திய அணி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளது. எங்களது நிலைப்பாடு மிகவும் எளிதானது.

நாடு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதன்படி நாங்கள் நடப்போம். இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறதோ? அது தான் எங்களது அடிப்படை கருத்தாகும். இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு எடுக்கிறதோ? அதன்படி நாங்கள் நடப்போம். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் மதித்து செயல்படுவோம். இந்த விஷயத்தில் இது தான் எங்களது நிலைப்பாடாகும்’ என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here