சீர்காழி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருவெண்காடு கிராமத்தில், தேவாரப் பாடல் பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது.
மேலும் காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம், தல விருட்சம் அனைத்துமே மூன்றாக அமைந்திப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
மேலும், பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்த தலம் என்பதால் இத்தலத்தினை ஆதி சிதம்பரம் என போற்றப் படுவதாக இத்தல வரலாறு கூறுகிறது.
மேலும் இத் திருத்தலம் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திர பெருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கமாகும்.
முந்தைய ஆண்டுகள் போன்றே இவ்வாண்டும் இந்திர பெருவிழா நேற்று பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நேற்று இரவு 7.40 மணி முதல் 9.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் முன்பு உள்ள பிரம்மாண்ட கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் நறுமன திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.
தொடர்ந்து இந்திரப் பெருவிழா கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அந்நிகழ்வின் போது திரளான பக்தர்கள் மனமுருகி சுவாமியை வழிப்பட்டனர். முன்னதாக கொடிமரம் முன்பு விநாயகர் ,முருகர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் முன்பு கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது தொடர்ந்து விநாயகர் முருகர் சுவாமி அம்பாள் சண்டிகேசருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய திருவிழாவாக எதிர் வரும் பிப்.25 ஆம் தேதி அகோர மூர்த்தி பூஜையும், மாலை சகோபரம் எனப்படும் தெருவடைச்சான் வீதி உலாவும், அதனைத்தொடர்ந்து 27 ஆம் தேதி திருக்கல்யாணம், மற்றும் 29 ஆம் தேதி திருத்தேர், மேலும் மார்ச் 3 ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் வெகுச் சிறப்பாக செய்து வருகின்றனர்.





















