திருவண்ணாமலை மார்.6-
திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த நகரமன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 39 வார்டுகளில் 31 வார்டுகளில் திமுக வென்றது. மேலும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளையும் திமுக வென்றது. அதன்படி நகரமன்ற தலைவராக நிர்மலா கார்த்திவேல்மாறன், துணைத் தலைவராக சு.ராஜாங்கம் ஆகியோர் பதவியேற்றனர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நகரின் முக்கிய சாலைகள் வழியாக வெற்றி ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அதன்படி நகரமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் திருவண்ணாமலை நகரில் உள்ள பெரியார்சிலை, அண்ணாசிலை, காந்திசிலை, காமராஜர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தநிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்பி, மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த வெற்றி ஊர்வலத்தில் திமுகவை சேர்ந்த அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் திமுக கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். இதையட்டி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.