மீஞ்சூர், பிப். 26 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான செயல்படாத அரிசி ஆலை ஒன்று உள்ளது. அவ்வாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்,
இந்நிலையில் அவர்களில் சிலர் நள்ளிரவின் போது, அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும், மேலும் வீட்டின் உரிமையாளர்கள் உள்ளே தூங்கிக் கொண்டு இருக்கும் போது வீடு உள்புறமாக தாழிட்ட நிலையில் இருக்கும் கதவை இரும்புக் கம்பிகளை பயன்படுத்தி திறந்து கைப்பேசி உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து திருடி செல்வதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் நள்ளிரவு வேளையில் கஞ்சா மற்றும் மது அருந்தி விட்டு போதையில் அப்பகுதி வாசிகளிடம் ரகளையில் ஈடுபடுவதோடு தனியாக வசிக்கும் பெண்களை கேலி கிண்டல் செய்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுக்குறித்து பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் ஆலையின் உரிமையாளரிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டதாகவும், அப்பிரச்சினைக் குறித்து அவர் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாததாலும், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஒன்றுத் திரண்டு வடமாநிலத்தவர்கள் தங்கியிருக்கும் தனியார் அரிசி ஆலையை முற்றுகையிட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வட மாநிலத்தவரை உடனடியாக வெளியேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து அச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் காவல்நிலைய போலீசார் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் மேலும், அரிசி ஆலையில் வட மாநிலத்தவர்களை தங்க வைத்துள்ள உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட அப்பகுதி குடியிருப்பு வாசிகள் போரட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.























