செங்கல்பட்டு, மார்ச். 31 –
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டுக்கு இருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. அதனின் படி முதல் கட்டமாக ஏப்ரல் மாதத்திலும், இரண்டாவது கட்டமாக செப்டம்பர் மாதத்திலும் சுங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிய வருகிறது.
மேலும், சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
அதன்படி செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை பொறுத்தவரை கார்களுக்கு 60-ரூபாயில் இருந்து 70-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105-ரூபாயில் இருந்து 115-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில் இருந்து 240-ரூபாயாகவும், மூன்று அச்சு வாகனங்களுக்கு 225 ரூபாயில் இருந்து 260-ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு 325- ரூபாயில் இருந்து 375-ரூபாயாகவும், ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 395- ரூபாயில் இருந்து 455-ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 10-ரூபாய் முதல் 60-ரூபாய் வரை இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும். இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.




















