மயிலாடுதுறை, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்….
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. காவிரி கடைமடை நீரொழிங்கி என்றழைக்கப்படும் இக்கதவனையில் இருந்து சீர்காழி, பூம்புகார் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாசன தண்ணீர் பிரித்து வழங்கப் படுகிறது.
இந்நிலையில் கதவணையின் மேல் பகுதியில் சென்ற உயிர் மின்னழுத்த மின்கம்பி இன்று காலை அறுந்து தண்ணீரில் விழுந்து உள்ளது. அதனால் அங்கு தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் உயிர் அழுத்த மின்சாரம் பாய்ந்துள்ளது.
அதனை அறியாது, குரங்கு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவமூர்த்தி என்பவர் தண்ணீரில் இறங்கியுள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து சிவமூர்த்தி கதவணை உள்ளேயே உயிரிழந்தார். அவ்வழியே சென்றவர்கள் விபத்து குறித்து மின்வாரியம் மற்றும் பூம்புகார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் சிவமூர்த்தி உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால் அதிலிருந்த மீன்கள், தவளை, பாம்பு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் இறந்து தண்ணீரில் மிதந்து வருகிறது.