படம் விளக்கம் : கும்மிடிப்பூண்டி வெட்டு காலனி பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப் படம்

கும்மிடிப்பூண்டி, மார்ச். 26 –

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வெட்டு காலனியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வெட்டு காலனி, மேட்டு காலனி ஆகிய பகுதிகளில் சாலை வசதி,  சுடுகாட்டுப் பாதை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி  போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை மாற்றி அமைப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகள் இப்பகுதியில் உள்ளது. இப்பிரச்சினைக் குறித்து  பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என உண்ணாவிதத்தில் ஈடுப்பட்டுள்ள கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கைக் கண்டித்தும், மேலும் சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு நடவடிக்கையில் வழங்கப்பட்ட நிலங்களை பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும்,  அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டனர். மேலும் அவர்கள் தொடர்ந்து மாலை 4 மணி வரை  கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்களின் போராட்ட தகவலறிந்து வட்டாட்சியர் ராமன்,  பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திறகு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதியில் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் அதுவரை எங்கள் உண்ணாவிரதம் தொடரும் என்று கூறியுள்ளார்கள்

பின்னர் இதற்கு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் தகவலை கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்பு உண்ணாவிரதத்தை கைவிட்டு கூட்டம் கலைந்து சென்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட இவ்வுண்ணா விரதப்போராட்டத்தால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here