சென்னை, டிச. 31 –
கடந்த ஒரு சில நாட்களாக சென்னையில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை தீவிரமாக கண்காணிப்பது குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மருத்துவர். ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டடத்தில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசால் தடை விதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்தவும் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும் மாநகராட்சியின் சார்பில் காவல்துறையுடன் இணைந்து ஒரு மண்டலத்திற்கு சுழற்சி முறையில் 3 அமலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதர நாட்களில் ஒரு மண்டலத்திற்கு சுழற்சி முறையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு தங்கள் மண்டலங்களில் பொதுமக்கள் அதிகம் கூ வாய்ப்புள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுள்ளது.
கோவிட் தொற்று பரவல் தற்போது அதிகரித்துள்ள நிலையில் தனியார் திருமண மண்டபங்கள், ஓட்டல்களில் நடைப்பெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தவேண்டும். அவ்வாறு நிகழ்ச்சி நடைப்பெறும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப் படுகின்றனவா என கண்காணிக்கவும் அமலாக்கக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இன்னும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும் சுமார் 8 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்ணிய நாட்களை கடந்தும் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவும் தரவுகள் மூலம் தெரிய வருகிறது எனவே கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு என்கின்ற நிலையில் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் அனைவரையும் எதிர் வரும் ஜன 2 ஞாயிறன்று நடைப்பெற உள்ள கோவிட் மெகா தடுப்பூசி முகாமில் செலுத்திக்கொள்ள மண்டல நல அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நடைப்பெற்ற அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவ்வப்பொழுது கைகளை கிருமி நாசினி அல்லது சோப்பு கரைசல் கொண்டு சுத்தம் செய்தல் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் போன்றவையே கோவிட் தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு சிறந்த வழிமுறைகள் என உலக சுகாதார நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து தொடர் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த சாலையோரம் உள்ள உணவு விடுதிகளில் உணவினை வாங்கும் பொழுது முகக்கவசம் அணிதல், சமூக இடை வெளியே கடைப்பிடித்தல் போன்றவைகளை மேற்கொண்டு உணவு அருந்துவது குறித்து அக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையாளர் டாக்டர் என், கண்ணன், துணை ஆணையாளர்கள் டாக்டர் மனிஷ், ( சுகாதாரம் ) வீஷூ மஹாஜன் ( வருவாய் மற்றும் நிதி ) வட்டார துணை ஆணையாளர்கள் சிம்ரன் ஜீத் சிங் காஹ்லோன், ( தெற்கு ) எம். சிவகுரு பிரபாகரன், ( வடக்கு ) மாநகர வருவாய் அலுவலர் சுகுமார்சிட்டிபாபு, மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா, உதவி வருவாய் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.