பழவேற்காடு, ஆக. 03 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. மேலும் இம் முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் அப்பகுதியின் வழியாக எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வந்தனர்.
மேலும் அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை தங்கள் சொந்த செலவில் தற்காலிகமாக மீன்வர்களே தூர்வாரி வந்தனர். மேலும் அதுத்தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும், நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ரூ. 27 கோடி மதிப்பீட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க திட்டம் தயாரித்து பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். அதன் தொடர்ச்சியாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
உடனடியாக தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த வாரம் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து முகத்துவாரம் வரையிலான 4.5 கி.மீ. வரையிலான நீரோட்ட வழிப்படுத்து சுவர் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற திருவள்ளூர் எம்பி ஜெயகுமார், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் அத்திட்டப்பணிக்கான அடிக்கல் நட்டு பணியினை தொடங்கி வைத்தனர்.
மேலும், அத்திட்டத்திற்கான வனத்துறை அனுமதி பெறுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று அப்பகுதியை நேரில் பார்வையிட்டு அனுமதி வழங்கிடும் பணிக்காக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் படகில் சென்று பழவேற்காடு முகத்துவாரத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், வனத்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
மேலும் முகத்துவாரத்தின் அவசியம் குறித்தும், முகத்துவாரம் அடைபடும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மீனவர்கள் வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டனர். விரைந்து அனுமதி பெற்று பணிகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இவ்வாய்வில் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மதிவேந்தன் சுற்றுச்சூழல் தொடர்பாக அனுமதி பெற வேண்டி உள்ளதாகவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும், மாநில வனத்துறை அனுமதி நிலுவையில் இருப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப நிரந்தர முகத்துவாரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் சாதக பாதகங்களை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.
பழவேற்காடு ஏரியில் பாதுகாப்பற்ற படகு சவாரி சுற்றுலா நடைபெறுவது தொடர்பாக தற்போது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடல் மணல் கொள்ளை குறித்தும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அமைச்சர் அப்போது தெரிவித்தார்.




















