பொன்னேரி, மே. 19 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் கிராம பகுதி என்பது, முப்போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும். மேலும் இப்பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் உழவர்ப் பெருங்குடி மக்கள் சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலத்தில் நெல் உட்பட பல்வேறு பயிர்களை நடவு செய்து மூன்று போக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது குருவைச் சாகுபடிக்காக அப்பகுதி விவசாயிகள் நாற்றுக்கள் விடப்பட்டு நடவுக்கு தயார் நிலையில் உள்ளனர். இருப்பினும் கடந்த மாதம் இப்பகுதியில் காற்றுடன் திடீரென பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள இரண்டு மின் கம்பங்கள் விளை நிலத்தில் சாய்ந்தது.
மேலும் இதுக்குறித்து பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமாக புகார்களை அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கைளையும் எடுக்கவில்லை என அப்பகுதி முன்னோடி விவசாயி திருமலை தெரிவிக்கிறார். மேலும் இப்புகார் குறித்த நினைவூட்டல்களை அவ்வலுவலக உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், நீங்கள் போங்க நாங்கள் வருகிறோம் என்கின்ற பதிலைத் தவிர்த்து வேறெதுவும் கூறாமல் கடந்த ஒரு மாதக் காலமாக மிகவும் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்வதாக அவர் குற்றம் சாட்டுகின்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் நடவிற்காக காத்திருக்கும் நாற்றும் வாடி அழுகிப் போகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு மாதக்காலம் ஆகிவிட்டதால் தொடர்ந்து தாங்கள் விவசாயம் செய்வதற்கான நீராதாரம் இல்லாமல் மிகவும் பாதிப்படைந்த நிலையில் உள்ளதாக அவ் விவசாயி தெரிவிக்கின்றார்.
மேலும் இப்பிரச்சினைக்குறித்து துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மின்வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா அல்லது நாற்றுக்களை நடவு செய்திட முடியாமல் நாசமாக்கி விடுமா என்பதை நாமும் பார்ப்போம் …
தம்பட்டம் செய்திகளுக்காக காட்டாவூர் கிராமத்தில் இருந்து பொன்னேரி செய்தியாளர் பாலகணபதி ….






















