நைரோபி:
கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள துர்கானா எரியின் நடுவில் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள தேசிய பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை இரண்டு ஹெலிகாப்டர்களில் தேசிய பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர். அதில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 4 பேரும், கென்யாவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் பைலட்டும் உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பூங்கா நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.