சென்னை, ஜூன். 2 –
பெருநகர சென்னை மாநகராட்சியால் தற்போது 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பரமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் தூய்மைப்பட்டுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன. எனவே பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மெக்கானிக்கல் வாகனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், மற்றும் அம்பத்தூர் (பகுதியளவு) ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய ப்யூர் என்வீரா இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 7 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள், தண்டையார்பேட்டை,இராயபுரம்,திருவிக.நகர், அம்பத்தூர் பகுதயளவு மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 16 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள், தேனாம் பேட்டை, கோடம்பாக்கம்,வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய அர்பசர் சுமித் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 33 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் என மொத்தம் 56 வாகனங்கள் பேருந்து சாலைகளில் மட்டும் தூய்மைப் பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வாகனங்களை முழுதிறன் அளவிற்கு பயன்படுத்தும் வகையில் நாளொன்றுக்கு ஒவ்வொரு வாகனமும் 50 கி.மீ.நீள சாலைகளை சுத்தம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து சாலைகளுடன் கூடுதலாக மாநகரின் முக்கியமான உட்புறச் சாலைகளையும் இந்த வாகனங்களை கொண்டு சுத்தம் செய்ய அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. என முதன்மைச் செயலாளரும் ஆணையாளருமான ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.






















