செங்கல்பட்டு, டிச. 23 –
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 2021-2022 ஆண்டிற்கான நாட்டிய விழா நடத்த, தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் புராதன நகரம் தொல்லியியல் கலைச்சிற்ப சுற்றுலா இடமாக விளங்குகிறது. இதனை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். வெளிநாட்டுப் பயணிகளின் ரசனை, ஆர்வம் கருதி, தமிழக சுற்றுலாத்துறை, மத்திய சுற்றுலாத் துறை பங்களிப்பில், ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதத்தில் இங்கு நாட்டிய விழாவை நடத்துகிறது.
ஒரு மாதம் நடக்கும் இவ்விழாவில் பரதம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி உள்ளிட்ட பாரம்பரிய நாட்டியங்கள், கரகம், காவடி, ஒயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இவ்விழாவில் இடம்பெறும். கடந்த ஆண்டு, கொரோனா பரவலால், வெளிநாட்டுப் பயணியர் வருகை இல்லாததால் விழா தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இவ்விழாவை, இன்று முதல் ஜனவரி 22 தேதி வரை நடத்தவுள்ள நிலையில், கடற்கரைக் கோயில் அருகில் திறந்த வெளிமேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது
இன்று நடைபெறும் முதல் நாள் நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ஊரகதொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் துவங்கி வைக்க உள்ளனர்.