திருவண்ணாமலை ஆக 4-

இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை அடுத்த செங்கம் வட்டம் தரடாப்பட்டு கிராமத்தில்  இஸ்லாமியர்கள் இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சலாம் பாஷா என்பவருடைய மகனுக்கு திருமணம் நடக்க இருந்தது. இதற்காக சமையல் பாத்திரங்களை எடுப்பதற்காக கடந்த 28ஆம் தேதி அங்குள்ள மஜித்துக்கு சையத் கவுஸ் தரப்பினர் சென்றனர்.
அப்போது அவர்களது எதிர் தரப்பினரான  இனாயதுல்லாவின் ஆட்கள்  பாத்திரங்களை தர மறுத்துவிட்டனர்.

இப்பிரச்சனை இரு தரப்பினரிடையே கை கலப்பாக மாறியது. வீடுகள், கார், பைக் அடித்து நொறுக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் காயமடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தலைமையில் அதிரடிப்படையினர் சென்று அந்த கிராமத்தில் அமைதியை ஏற்படுத்தினர்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து 14 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஒரே தரப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவரைக் கூட போலீசார் கைது செய்யாமல் விட்டு விட்டதாக கூறி சையத் கவுஸ் தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் மனு கொடுப்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.  மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்சை நேரில் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் போலீசார் தங்கள் தரப்பை சேர்ந்த 14 பேரை கைது செய்திருப்பதாகவும், எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவரைக் கூட கைது செய்யாமல் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், தற்போது தங்கள் தரப்பினரை ஜாமீனில் எடுக்க கூடாது என எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் மிரட்டி வருவதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவுத்துள்ளனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட உயர் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

தரடாப்பட்டு கிராம மக்கள் மனு கொடுக்க வந்ததையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here