மயிலாடுதுறை, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பெரம்பூர் ஊராட்சி அகரவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (30). அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் அவர் கடந்த 10 ஆம் தேதி திருக்கடையூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு (பல்சர் என்எஸ்150) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இரவு தங்கை வீட்டில் தூங்கிவிட்டு காலை எழுந்து பார்த்த போது வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த ஐயப்பனின் பல்சர் இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர் அக்கம் பக்கம் என எங்கு தேடியும் விசாரித்துப் பார்த்தும் அது கிடைக்காததால்,
அக் களவுப் போன இருசக்கர வாகனம் தொடர்பாக கடந்த பிப் 12 ஆம் தேதி பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப் புகார் குறித்து காவல் உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், இருசக்கர வாகனம் மாயமான பகுதிக்கு சென்று அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் பிரகாஷ் (21), மணிகண்டன் மகன் சாருகேஷ் (19). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் ஐயப்பனின் பல்சர் இருசக்கர வாகனத்தை திருடியது அவ்விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து சிறுவன் உள்ளிட்ட மூவருடன், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றிய தனிப்படை போலீசார் பொறையார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து, பொறையார் போலீசார் டூவீலரை பறிமுதல் செய்ததுடன், பிடிபட்ட மூவரையும் கைது செய்து பிரகாஷ், சாருகேஷ் இருவரையும் திருச்சம்பள்ளியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் பொறையார் கிளைச் சிறையில் அடைத்தனர். 17 வயதுடைய சிறுவனை நாகை சிறார் நீதி குழுமத்தில் ஆஜர் செய்த பின்னர் தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சேர்த்தனர்.





















