தஞ்சாவூர், பிப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணி காத்து, மேலும் நகரை அழகாக்கும் பணியில் உயிரை துச்சமென நினைத்து ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவது , கிருமி நாசினி தெளிப்பது என தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ‘சுத்தம் பிரியாணியும் போடும்’ என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா தஞ்சை மாநகராட்சி 13ம் கோட்ட தூய்மை பணியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி 13ம் கோட்டத்தை சேர்ந்த ( வார்டு 50 / 51 பகுதியில் பணிபுரியும் ) தூய்மை பணியாளர்கள் – ஊர்தி ஓட்டுனர்கள் – உதவியாளர்கள் – அனிமேட்டர்கள் – டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் – மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட 85 பணியாளர்களுக்கு மட்டன் – சிக்கன் – முட்டை – ஐஸ்க்ரீமுடன் கூடிய விலையில்லா அசைவ மதிய விருந்து பரிமாறப்பட்டது.

முன்னதாக வெற்றிலை – பாக்கு – சீவல் – சந்தானம் – குங்குமம் – பன்னீர் சகிதம் தூய்மை பணியாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் வகையில் சுத்தம் பிரியாணியும் போடும் என்ற இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாகவும், தன்னலம் கருதாமல் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தஞ்சை நகர பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் முழு அசைவ விருந்து பரிமாறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தஞ்சை மாநகராட்சியில்தான் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் விலையில்லா முழு அசைவ விருந்து பரிமாறும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது எனவும், வருடந்தோறும் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்தளிக்கும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தனர்.

மேலும் தூய்மைப் பணியாளர்களை பாரம்பரிய முறைப்பட வரவேற்பளித்து இன்முகத்துடன் அசைவ விருந்து பரிமாறிய ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு 13வது கோட்ட துப்புரவு ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையிலான தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர் .

இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here