கன்னியாகுமரி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், குமரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி பதி ஆகியவற்றில் அவர் தரிசனம் செய்தார்.
முன்னதாக கன்னியாகுமரியில் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. அம்மாவின் பெரும்பாலான தொண்டர்களும் எங்கள் கட்சியில் தான் உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அ.தி.மு.க. பெரிய வெற்றியை பெறப் போவதில்லை. ஆர்.கே. நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.
அதேபோல பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் சின்னத்துக்கு முக்கியத்துவம் இருக்கப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.