வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த பல் மருத்துவரின் உடல் உறுப்புக்களை அவரது தாய் தானம் செய்து தன் மகனின் உடல் உறுப்புக்கள் இவ்வுலகில் உயிர் வாழ முன் வந்துள்ளார்.

சென்னை, டிச. 13 –

சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 28-வயதான ஜோஸ்வா என்பவர் வசித்து வந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், கோட்டரம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவரான இவர் சில நேரங்களில் தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் (11ம் தேதி) இரவு அதே பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று நண்பரை பார்த்துவிட்டு இரவு சுமார் ஒரு மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் 3வது பிரதான சாலை வழியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ஜோஸ்வாவை மீட்ட போலீசார் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜோஸ்வா (12.12.2021) நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மருத்துவமனைக்கு சென்று ஜோஸ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் ஜோஸ்வாவின் பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்த தாய் செலின் மனோகரதாஸ் மற்றும் சகோதரர் ஜொனத்தன் தாஸ் ஆகியோர் ஜோஸ்வாவின் உடல் உறுப்புக்களான 2-கிட்னி, கண்கள், லிவர், பான்கிரியாஸ், இருதயம் மற்றும் இருதய வால்வுகளை தானம் செய்துள்ளனர்.

இளம் வயதுடைய தனது மகன் இறப்பு சொல்ல முடியாத துயரைத் தந்தாலும்,  உடல் உறுப்பு தானத்தின் மூலம் தனது மகன் ஜோஸ்வா வாழ்ந்த வாழ்க்கைக்கு பெருமையும், புகழையும் சேர்த்து, இறந்த பின்னும் இவ்வுலகில் மகனின் உடல் உறுப்புக்கள் உயிர் வாழ செய்துள்ளார்.

இவரின் இச்செயல் எல்லோர் மனதையும் நெகிழ வைத்தது. மேலும், சமீபத்தில்தான் ஜோஸ்வாவின் தந்தையும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here