கும்பகோணம், ஜன. 3 –
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கில் சமீபத்திய மழையால் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன அதற்கு காரணமான அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே சன்னாபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது .கடந்த மாதம் பெய்த கன மழையினால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. அதனை காய வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென கடந்த இரு நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதில் காய வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் பெரும் அளவு நணைந்தன.
இதனால் ஏராளமான நெல் மூட்டைகள் சேதமடைந்தன. இந்நிலையில் இந்த திறந்தவெளி சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ,அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தஞ்சை மாவட்டத்தில் இந்த வருடம் வரலாறு காணாத அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடம் இல்லாத அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் பல்வேறு இடங்களில் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் கும்பகோணம் அருகே சன்னாபுரத்தில் மழையினால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததற்கு காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது வரை 45 டன் அளவிற்கு சேதம் அடைந்து இருப்பதாகவும், சேதமடைந்த நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது அரசு கொறடா கோவி. செழியன் உடனிருந்தார், நெல் மூட்டைகள் பெருமளவு நனைந்து சேதமாகி இருப்பதை பார்த்த அரசு கொறடா கோவி செழியன் எவ்வளவு நாட்கள் நனைந்திருந்தால் சாக்குகள் நைய்து போயிருக்கும் ? என நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களிடம் கடிந்து கொண்டார். இனிமேல் இதுபோல் சேதமடையாத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கோவி. செழியன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.