ஆவடி, டிச. 31 –
சென்னை திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் இன மக்கள் ஆடல், பாடலுடன் கேட் வாக் செய்து புத்தாண்டு விழா கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மனம் மகிழச் செய்தது.
சென்னை திருமுல்லைவாயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 102 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆவடியை சேர்ந்த ரிடெயின்ஸ் ஸ்மைல் என்ற தொண்டு நிறுவனம் இங்குள்ள நரிக்குறவர் இன மக்களுடன் இணைந்து 2022 புத்தாண்டை கொண்டாடியுள்ளது.
102 குடும்பத்தை சேர்ந்த கணவன் ,மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாடை வழங்கி இசை, நடனப் போட்டி மற்றும் ஆடை அலங்கார நடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட நரிக்குறவர் பெண்கள் ஒரே விதமான புடவை அணிந்து ஆடை அணிவகுப்பு போட்டியில் ஒய்யார நடை நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
அதேபோல் திரைப்பட பாடலுக்கு ஜோடியாக நடனமாடி அசத்தினர். அவர்களுடன் ரீடென்யின்ஸ் ஸ்மையில் தொண்டு நிறுவனர் ராகுல் போரா இணைந்து கேக் வெட்டி 2022 புத்தாண்டை கொண்டாடினர். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.. இது குறித்து பேசிய நரிக்குறவ மக்கள், சமூகத்தில் தங்களை பலர் ஏற்க மறுக்கும் நிலையில் இந்த ஆண்டு தங்களையும் சக மனிதர்கள் போல் நினைத்து புத்தாண்டை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.




















