கும்பகோணம், மார்ச். 24 –

கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பந்தடிமேடை அருள்மிகு ஸ்ரீ காத்தாயியம்மன் மற்றும் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலின் 114 வது ஆண்டு பங்குனி திருநடனப்பெருவிழாவினை முன்னிட்டு அத்திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றம் மற்றும்காப்பு கட்டுதலுடன் பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.

முன்னதாக இன்று, கொடிமரத்திற்கு மஞ்சள் பொடி மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்வித்த பிறகு, நந்தியம்பெருமான் வரையப்பெற்ற திருக்கொடி, நாதஸ்வர மேள தாளம் முழங்க, மந்திரங்கள் ஜபிக்க, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோயில் தெய்வங்கள் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, திருக்கோயில் ஸ்தானிகர் துரை, உதவி ஸ்தானிகம் கார்த்திகேயன் உட்பட ஏராளமானோர் திருவிழாவிற்காக விரதம் தொடங்க வலதுகர மணிக்கட்டில் மஞ்சளுடன் சேர்த்து கட்டப்பட்ட நூல்கயிற்றை காப்பாக கட்டிக்கொண்டனர்.

மேலும் ஆண்டு தோறும் நடைப்பெறும் இப்பங்குனி திருநடன பெருவிழா இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 03ம் தேதி திங்கட்கிழமை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நண்பகல் காத்தாயியம்மனுக்கு சம்வத்ஸரா அபிஷேகமும், அன்னப்படையலும், செய்விக்கப்பட்டு, மாலை சர்வ அலங்காரத்தில் உற்சவர் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

தொடர்ந்து நாளை மறுதினம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சக்தி வேல், சக்தி கரகம், பால் குடத்துடன் காவிரி டபீர் படித்துறையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருக்கோயிலுக்கு வந்து அங்கு வசந்த பாலாபிஷேகமும், கஞ்சிவார்த்தல் நிகழ்வும் நடைப்பெறும்.

தொடர்ந்து எதிர்வரும் 29 ஆம் தேதி காலை, தாய் வீட்டு சீதனம் எடுத்து வருதலும் பத்ரகாளியம்மன் எழுந்தருளல், ஊஞ்சல் உற்சவத்துடன் ஆனந்த திருநடனக்காட்சியுடன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

மேலும், ஏப்ரல் மாதம் 03 ஆம் தேதி திங்கட்கிழமையன்று கும்ப பூஜையுடன் விடையாற்றி நடைபெற்று, இவ்வாண்டிற்காண பங்குனி திருநடனக்காட்சி பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

இப்பங்குனி திருநடன பெருவிழாவிற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை இத்திருகோவில் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here