ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் தின நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ராமநாதபுரம் த.மு.மு.க., சார்பில் புனித ஹஜ் (பக்ரீத்) பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. உலக முஸ்லிம்களால் ஈகை திருநாளாக புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இதை யொட்டி ராமநாதபுரம் நகர் த.மு.மு.க., சார்பில் வசந்த மகால் நபி வழி திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராள மானோர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் பரக்கத் துல்லா, நகர் செயலாளர் பெரோஸ்கான், சதக் தம்பி, மன்சூர் அலி, மாவட்ட தலைவர் அன்வர் அலி, மாவட்ட செயலாளர் சிக்கல் பாகீர் அலி, பொருளாளர் நம்புதாளை பாரீஸ், துணை செயலாளர்கள் ஜஹாங்கீர் அலி, துணை தலைவர் சிராஜ்தீன், அப்துல் ரஹ்மான், அஜீஸ் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருவரை, ஒருவர் ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு குர்பானி வழங்கப்பட்டது. இதே போல் ஈத்கா மைதானம் உட்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகை தின சிறப்பு தொழுகைகள் நடந்தது.