ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை … ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது .. மேலும் விசாரணையில் ஏற்கனவே கடந்த ஆண்டு பத்திரப்பதிவு செய்ய அதே நபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திடுக்கிடும் தகவல் …
திருவள்ளூர், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்துள்ள வீராபுரம் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரர் (55). இவர் மோரைப் பகுதியில் 2400 சதுர அடி கொண்ட தன்னுடைய நிலத்தை கடந்த 14 ஆம் தேதி பத்திரபதிவு செய்து 19 ஆம் தேதி ரசீது பெற்றுள்ளார்.
இந்நிலையில், நிலத்திற்கான பத்திரத்தை பெறுவதற்கு இணை பத்திர பதிவாளர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த அமுல்ராஜ்-34 என்பவர் ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த லஞ்ச பணத்தை புரோக்கர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தென்னரசு, 29 ; என்பவரிடம் வழங்கும்படியும் அமுல்ராஜ் கோடீஸ்வரனிடம் கூறியுள்ளார்.
பணத்தை கொடுக்க விரும்பாத கோடீஸ்வரன், இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறையினர் அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூ. 1 லட்சம் நோட்டுகளை, கோட்டீஸ்வரன், புரோக்கர் தென்னரசுவிடம் கொடுக்கும் போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் ராமசந்திர மூர்த்தி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான அதிகாரிகள் கையும் களவுமாக அவரைப் பிடித்துள்ளனர்.
மேலும் அதுக் குறித்து விசாரணை செய்ததில் இணை சார் பதிவாளர் அமுல்ராஜ் அறிவுறுத்தலின் படி லஞ்சம் பெற்றதாக கூறியுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் சார் பதிவாளர் அறைக்குள் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் நடத்திய தொடர் விசாரணையில் கடந்த ஆண்டு ஏற்கனவே கோடீஸ்வரன் தனது மற்றொரு இடத்தை பத்திர பதிவு செய்ய இதே இணை சார்பதிவாளரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சமாக வழங்கியது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.























