ஆரணி, மார்ச். 15 –
திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சிறுவாபுரி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும், மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது.
இதனால், இத்தினத்தில் இத்திருக்கோயிலுக்கு மாவட்டங்களை கடந்து பல்வேறு பகுதிகளில் இருந்து முருகப்பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு திரளாக வருகின்றனர். மேலும் இத்தலத்தில் உள்ள ஸ்ரீமுருகப்பெருமானிடம் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தால் தங்களை பிடித்த பிணி நீங்கி எல்லா வளங்களும் தங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றாவறு செவ்வாய்கிழமை தோறும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பன் மடங்கு கூடி வருகிறது.
அதுப் போன்று செவ்வாய்கிழமையான நேற்று இத்திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த நிலையில் இக்கோவில் சுவாமி தரிசனத்திற்கான கால நேரம் முன்னதாகவே இரவு 8 மணியளவில் இக்கோயில் கதவு மூடப்பட்டு சுவாமி தரிசனத்திற்காக நீண்ட நேரம் கால்கடுக்க அலங்காரமண்டபம் தரிசனப்பாதையில் காத்திருந்த பக்தர்களை கோவில் நிர்வாகத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்கள் ஆவேசத்துடன் கோவில் நிர்வாகிகளுடன் ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் தரிசன பாதையில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை இழுத்து ரகளை செய்துள்ளனர். மேலும் அதன் மீது ஏறி நின்று கொண்டு நடையை திறக்குமாறு கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது,
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இப்பிரச்சினையில் தலையிட்டு ரகளையில் ஈடுபட்ட பக்தர்களை அங்கிருந்து வெளியேற்றிவுள்ளனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் கோவிலுக்கு வெளியே தீபங்களை ஏற்றி வைத்து குமரனை காண முடியாது, விரத்தி மற்றும் மனக்குமுறலுடன் கோவில் கோபுரத்தை தரிசனம் செய்து அங்கிருந்து சென்றனர்.