கும்பகோணம், டிச. 16 –

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி தெப்போற்சவ கொடியேற்றம் இன்று, பெருமாள் தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து, தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்காம் நாளான 19ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை பிரசித்தி பெற்ற கல்கருட சேவையும், ஸ்ரீ பெருமாள் கருட வாகனத்திலும் தாயார் அன்னபட்சி வாகனத்திலும் ஓலைச் சப்பரம் திருவீதி உலா நடைபெறுகிறது.

தொடர்ந்து 8ம் நாளான 23ம் தேதி சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும், 9ம் நாளான 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  தெப்போற்சவமும், 10ம் நாளான 25ம் தேதி திங்கட்கிழமை சப்தாவர்ணமும், நிறைவாக 11ம் நாளான, 26ம் தேதி செவ்வாய்க்கிழமை விடையாற்றியுடன் இவ்வாண்டிற்காண மார்கழி தெப்போற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பிரபாகரன், கோவில் பட்டாச்சாரியார் கோபி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உபயதாரர்கள், சிறப்பாக செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here