தேனி கலாம் நண்பர்கள்,தேனி பசுமை 2020, என்ற அமைப்பும் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில் அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அப்துல் கலாம் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகிய விஷன் 2020 மாநில தலைவர் திருச்செந்தூரான் பங்கேற்றார். தேனி அரசு கல்லூரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன் விழாவினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக சேவை, குருதிக்கொடை, இயற்கை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வரும் சமூக ஆர்வலர்களை இனம் கண்டு அவர்களுக்கு ஊக்கம் அளித்திடும் வகையிலும்,மேலும் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்துபவர்கள் போன்றோருக்கு அப்துல் கலாம் விருதுகளை தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் திருச்செந்தூரான், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி ஆகியோர் இணைந்து வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்களிடம் ஒரு உறுதிமொழி ஏற்பது போல .. அவரது உதவியாளரான திருச்செந்தூரான் உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மாணவ-மாணவிகளிடம் அப்துல் கலாமின் கருத்துக்களை எடுத்துக்கூறி கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விண்வெளி ஆராய்ச்சி படிப்பு மாணவி உதய கீர்த்திகாவின் பெற்றோர் மற்றும் நீச்சலில் தலைமன்னார் ராமேஸ்வரம் இடையே குற்றாலீசுவரன் படைத்த சாதனையை முறியடித்த தேனி மாணவன் ஜெய் அஸ்வத், மாற்றுத்திறனாளிகள் கால்பந்து போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பாலமுருகன் ஆகியோருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பசுமை தேனி சர்ச்சில் துறை, கலாம் நண்பர்கள் சரவணகுமார், சரவணன், மேனிஸ் குமார் , லோகேஸ்வரன் பாண்டி, வீரமணி , மற்றும் மாணவ மாணவிகள் சமூக சேவகர்கள் பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.