கும்பகோணம்,ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அம்மாசத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 100 யூனிட் ஆற்று மணலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், மணலை பதுக்கி வைத்திருந்த தனியார் ட்ராவல்ஸ் உரிமையாளரை தலை மறைவாகி உள்ளார் அவரையும் காவல்துறையினர் பிடிக்க வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவிடைமருதூர் தாலுக்கா, அம்மாச்சத்திரம் பகுதியில் தனியார் ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் ஆற்று மணல் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டதில் அங்கு, உரிய அனுமதி இன்றி ரூ.2 கோடி மதிப்புள்ள 100 யூனிட்டிற்கு மேல் ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து அங்கு மணலை லாரிகளில் அள்ளிக் கொண்டிருந்த கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளஞ்செழியன் (35), சக்திதாசன் (23), சுந்தர் (23), முருகேசன் (40), சந்திரசேகரன் (38) ஆகிய 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்து இரண்டு ஜே.சி.பி எந்திரம், இரண்டு டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மணலை பதுக்கி வைத்திருந்த தனியார் ட்ராவல்ஸ் உரிமையாளர் சவுந்தரராஜனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..
இவை கட்டுமானத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? அல்லது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா, மேலும் அம் மணல் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்பது போன்ற பல்வேடு கோணங்களில் கைது செய்யப் பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






















