கும்பகோணம், ஏப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர், அரசு கொறடா, மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை வழிமறித்து சாலை வசதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு நிலவியது.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஆகியோர் திருவிசநல்லூரில் இருந்து தொடங்கி பருத்திக்குடி, சூரியனார் கோவில், நரசிங்கம்பேட்டை, ஆடுதுறை, திருவாலங்காடு, சாத்தனூர், எஸ்.புதூர், திருநீலக்குடி உள்ளிட்ட 47 கிராமங்களுக்கு இன்று திறந்தவேனில் சென்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது திருக்குளம்பியம் என்ற கிராமத்தின் வழியாக சென்றபோது வேட்பாளர் சுதா, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், ஆகியோரது  பிரச்சார வாகனத்தை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வழி மறித்து சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டனர். அவர்களிடம் கோவி.செழியன் ரோடு போட்டு தருகிறோம் என தெரிவித்தபடி வாகனத்தை நிறுத்தாமல் கடந்து சென்றார்.

அதனை பின் தொடர்ந்து வந்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கத்தின் பிரச்சார வாகனத்தையும் வழி மறித்த விவசாயிகள் சாலை மிக மோசமாக உள்ளது, இரண்டு மாவட்டம், இரண்டு தாலுகா 5 ஊராட்சிகள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். உங்களுடைய நிதியில்தான் சாலை போட்டு கொடுக்க வேண்டும் வேறு வழியில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவரிடம் பேசிய எம்.பி ராமலிங்கம், நான் ஒன்றிய தலைவராக இருந்த போதுதான் இந்த சாலையை அகலப்படுத்தி புதிதாக போட்டுக் கொடுத்தேன். இந்த சாலையில், டிராக்டர் ஜேசிபிகளை பயன்படுத்த விடாதீர்கள். அதனால்தான் சாலைகள் சேதம் ஆகிறது என தெரிவித்தார்.

அதனைக் கேட்டு விவசாயிகள் அப்புறம் விவசாயி எந்த வழியாகத்தான் டிராக்டரை ஓட்டி செல்வான். எனக்கூறி ரோடு போட ஏற்பாடு செய்யுங்கள் என கொந்தளித்தனர். அதையடுத்து வெற்றி பெற்ற பிறகு பார்ப்போம் என அவர்களிடம் தெரிவித்துவிட்டு கடந்து சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here