ஆவடி மாநகராட்சி அலுவலகம் வாயலில் எ.ஐ.டி.யூ.சி சார்பில் உள்ளாட்சி ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆவடி கிளைத் தலைவர் கோபி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2016 ஆம் ஆண்டு சம்பள கமிஷன் ஏழாவது ஊதியக்குழு நிலுவையில் உள்ள தொகையை உடனே வழங்க வேண்டும்,
ஓய்வுகால பணப் பயன்கள் காலதாமதமின்றி ஓய்வு பெறும் நாளன்றே வழங்கிட வேண்டும், தினக்கூலி ஒப்பந்தம் மற்றும் வெவ்வேறு பெயர்களில் பணியமர்த்திய அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும், ஆவடி மாநகராட்சியில் ஆயுட் காலம் முடிந்து குப்பை எடுக்கும் லாரிகளை நிறுத்தி விட்டு புதிய குப்பை லாரிகளை வாங்க வேண்டும் என்பன 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநில அரசுக்கு எதிராக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி செயலாளர் வி.ஜான்சன், பொருளாளர் பி.சுப்பாராவ் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.