பெரியபாளையம், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்..
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய ₹ 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கியது.
இந்நிலையில் கோயிலுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பழைய அரசு கட்டிடங்கள் இருந்து வந்த நிலையில் அதனை கோயில் நிர்வாகத்தின் சார்பில் பணிகள் செய்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்ரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஆரணியாற்றின் கரையை உடைத்து சுடுகாட்டை சுத்தம் செய்தனர்.
அதையறிந்த கோயில் அருகே பவானி நகர் மற்றும் கனகவல்லி நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆற்றின் கரையை உடைத்து சுடுகாட்டை ஏன் சுத்தம் செய்கிறீர்கள் அது எங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறினர். அதையறிந்த கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் சம்பவயிடத்திற்கு வந்தார் அப்போது அவரிடம் கிராமத்தினர், பல தலைமுறைகளாக நாங்கள் இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறோம் அது எங்களுக்குதான் சொந்தம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை சமரசம் செய்தனர். அப்போது அவர்கள் சுடுகாடு குறித்து கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் ஆதார் கார்டு, ரேசன் கார்டுகளை திருப்ப ஒப்படைத்து எதிர் வரும் நாடளுமன்றத் தேர்தலையும் புறக்கணிப்போம் என கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





















