கும்பகோணம், டிச. 05 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் கொம்மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 52 இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு இவர் பால் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தொடர்ந்து மழையும் காற்றும் வீசியதால் அத்திப்பாக்கம் சுடுகாடு அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து கீழே அறுந்து விழுந்துக் கிடந்த மின் வயர் காலில் சிக்கியதால் மின்சாரம் தக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக்கண்டு விரைந்து சென்று செயலாற்றிய அக்கம் பக்கத்தினர் மின்வாரிய ஊழியர் மூலம் மின்சாரத்தை உடனடியாக துண்டித்தனர். தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பந்தநல்லூர் காவல்நிலைய போலீசார் பால் வியாபாரியின் உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விபத்துக் குறித்து பந்தநல்லூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பந்தநல்லூர் மின்வாரிய அலுவலர்கள் அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள மின் கம்பிகளை மாற்றுவதற்கு வந்தனர். அதனைக் கண்டு அங்கு திரண்ட அப் பகுதி இளைஞர்கள் மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை முற்றுகையிட்டு உயிர்பலி கொடுத்த பிறகு தான் மின் கம்பிகளை மாற்றுவீர்களா எனவும், விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பே இப்பணிகளை முறையாக செய்திருக்க கூடாதா என்றவாறு பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழப்பி தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






















