கும்பகோணம், ஆக. 08 –
கும்பகோணத்தில் இன்று, இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த புகைப்படக் கண்காட்சி துவக்க விழா இதயா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், திறந்து வைத்து, அதனைப் பார்வையிட்டார்.
இப்புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து 5 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மேலும் இப்புகைப்படக் கண்காட்சியை காண வரும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். கண்காட்சியில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, இயற்கை வேளாண் மற்றும் சிறுதானிய வகைகள், தபால் துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆதார் அட்டை எடுத்தல், சிறு சேமிப்பு குறித்த விழிப்புணர்வு, காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் இயற்கை மருத்துவம் குறித்த விளக்கம் மற்றும் சேவைகள், சுற்றுச்சூழல் வாழ்வியல் முறை குறித்த விளக்கம் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு அரங்குகளும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பாக கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் சென்னை மண்டல அலுவலக இயக்குனர் காமராஜ் இதயா மகளிர் கல்லூரி முதல்வர் யூஜின் அமலா, நேரு இளையோர் மையம் துணை இயக்குனர் நீலகண்டன் தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் மருத்துவர் குணசீலன் கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் அலமேலு மற்றும் பேராசிரியர்கள் அரசு அலுவலர்கள் மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் சுற்றுச்சூழலை காக்க கூடுதல் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.