செங்கல்பட்டு,மே. 19 –
சென்னை அடுத்துள்ள படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ் வி சி மோட்டார்ஸ் எனும் வாகன விற்பனை கடையில் TVS APACHE எனும் புதிய பைக்கை சுமார் ரூ. 80 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் வாங்கிய 3 மாதத்திலேயே வாகனத்தின் டிஸ்க் பிரேக் பழுதாகி உள்ளது. இதுக் குறித்து அவ் வாகனத்தை வாங்கிய இடத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு அந்த வாகன விற்பனையாளர் டிவிஎஸ் சர்வீஸ் சென்டரில் வாகனத்தை பழுது பார்க்குமாறு கூறியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, அனிதா மேரி டிவிஎஸ் சர்வீஸ் சென்டருக்கு சென்று பிரேக் டிஸ்க்கை மாற்றி உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து 3-முறைக்கும் மேல் பிரேக் டிஸ்க் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா மேரி செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ் வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் காசி பாண்டியன் மற்றும் உறுப்பினர் ஜவகர் ஆகியோர் பாதிக்கப்பட்ட அனிதா மேரிக்கு வாகனத்தை விற்பனை செய்த எஸ் வி சி மோட்டார்ஸ், டி வி எஸ் சர்வீஸ் சென்டர், வாகன உற்பத்தி தொழிற்சாலை ஆகிய மூவரும் சேர்ந்து வாகனத்தின் முழு தொகையான ரூ.80 ஆயிரத்தையும், நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய காரணத்திற்காக ரூ. 1 இலட்சமும் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ. 15 ஆயரமும் சேர்த்து மொத்தம் ரூ. 1.95 இலட்சத்தினை இழப்பீடாக வழங்கிடுமாறு அந் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.